உறவுகளே.
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்றஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் 60 க்கு மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றியுள்ளார்கள் ஒவ்வொரு கவிஞர்களும் மிக அருமையாக தங்களின் கவித்துவத்தை படைத்துள்ளார்கள்அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நடுவர்கள் தெரிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தும்திறமையான நடுவர்கள் மிகத் திறமையாக வெற்றியாளர்களை தெரிவு செய்தார்கள்.
அந்த வெற்றியாளர்கள். விபரம் பின்வமாறு.
நடுவராக கடமையாற்றியவர்கள்
கவிஞர்.ரமணி ஐயா-(இந்தியா)
வலைச்சித்தர்.திண்டுகல் .தனபாலன்(இந்தியா)
அறிஞர்.யாழ்பாவானன் (இலங்கை)
மூவருக்கும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர் என்ற வகையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
வெற்றி பெற்ற 1ம் இடம்.2ம் இடம்.3ம் .இடம் கவிதைகள் வருமாறு.
1ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.
மடியவில்லை மனிதநேயம்
; மண்ணிற் குள்ளே
மறைந்திருக்கும் விதைநீரால்
முளைத்தல் போன்று
அடித்தபெரு மழையினாலே மதங்கள்
சாதி
அழிந்துநெஞ்சில் துளிர்ந்ததுவே அன்பு
நேயம் !
வடிந்திடாமல் மழைநீர்தாம் வீதி
சுற்றி
வழியமைத்து வீட்டிற்குள் புகுந்த
போல
இடியோடு வந்தமழை அக்கம்
பக்கம்
இருப்போரை இணைத்ததுவே இரக்கம்
ஊட்டி !
பாய்ந்துவந்து ஏரிநீர்தாம் சூழ்ந்து
போது
படகுகளில் சுற்றிசுற்றி உதவி
காத்தார்
தீய்த்தபசி வயிற்றோடு மாடி
மீது
நாட்டுமக்கள் உள்ளத்துள் கருணை
ஊறி
நாற்புறமும் குவிந்தனவே
பொருள்கள் வந்து
கேட்குமுன்பே பணம்உடை போர்வை
சேர்த்துக்
கேட்டுகேட்டு அளித்தார்கள் பாதித்
தோர்க்கே !
ஏழைபணக் காரனென்னும் பேத
மின்றி
ஏந்தியகை யிலன்பாலே நிறைத்தார்
நன்று
வாழையடி வாழையாக இருந்த
பண்பு
வாரிவந்த மழையாலே
தழைத்த தின்று !
-ஆக்கம்-பாவலர்.கருமலைத்தமிழாழன்-
2ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.
அற்றார் அழிபசி தீர்க்க
அய்யன் திருவள்ளுவர்
ஓடி வந்தார் !
அட்சயப் பாத்திரமேந்திய
மணிமேகலா தெய்வங்கள்
மனித உருவெடுத்து
மாநகர வெள்ளத்தின்
துயர் துடைத்தனர் !
பாலென அழுவோர்க்கு
பால் தருவோம் – பசுங்
கூழென வருவோர்க்கு
சோறிடுவோமென்று
கண்ணதாசர்கள்
கடைவிரித்தனர் !
தனி மனிதனுக்கு
உணவில்லையோ என்று
பாரதிகள்
உணவு சமைத்து
ஓடி வந்தனர் !
தமிழ்நாடே
தலைநகர் நோக்கி
விரைந்தது !
விண்ணிலிருந்து
உணவு மழை
வீடு தேடிப்
பொழிந்தது !
மண்ணில் வந்து
தரை தட்டிய கப்பல்
மாநகரின்
பசி தீர்த்தது !
வெள்ளம் வடியுமுன்னே
மக்களின் வேதனை வடிய
உள்ளங்கள் கோடி
துடித்தன !
மனிதாபிமானம் வென்றதை
மனிதம் பூத்ததை
தமிழ் நிலம்
தரணிக்கு உணர்த்தியது !
அடைமழையா? கடல்நடுவே தவித்தோம்!
வாழ்வே,
அழிந்ததுவோ நீளுமதோ யாரே கண்டார்?
கடையெதுவோ? கலமதுவோ? எல்லாம் நீரே!
கால்தழுவி பாலென்றால் பன்னூ றென்றார்!
முகமதியர் கடையதனில் கடுகும் தீண்டா :
முக்காடு இட்டகுல இனமே வேண்டா :
பகைமையினை கெடுமதிகள் கக்கும் போழ்தில்
பண்போடு பிரசவித்தார் : பிணஞ்சு மந்தார்!
கழுத்தளவு தண்ணீரில் உண(ர்)வை தந்தார் :
கண்ணீரில் நனைக்கின்றோம் உந்தன் தாளை!
எழுத்தளவு ஏடளவு எதுவும் போறா!
எம்முயிரை காத்தவரை மனதிற் கொள்ளின்!
ஏசுவல்லா ஈசனவன் எதிரில் கண்டோம்!
எம்மெதிரே தம்முயிரை தூசாய் கொண்டோர்!
தூசுவல்லோ பிறன்பொருளில் தம்பேர் காண்போர்
துயரற்று வாழுகிறார்
இவரைக் கொண்டே!
-ஆக்கம்-ப.தமிழ்வாணன்-
வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசு பொருட்கள் தபால் வழி மிக விரைவில் வந்தடையும் என்பதை மிக்க மகிழ்வாக அறியத்தருகிறோம்
சித்திரை வருடப்பிறப்புக்கான போட்டி மிக விரைவில் அறிவிக்கப்படும்......
-நன்றி-
-அன்புடன்-
-ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற அமைப்பாளர்
கவிஞர்.த.ரூபன்-