திங்கள், 27 ஜூன், 2016

புதிய ஊற்று - வலைத்திரட்டி விரைவில் வெளிவரும்

இனிய எங்கள் வலையுறவுகளே!
வலைப்பூக்களில் புதிய பதிவுகள் பதியப்பட்டதும் வலைத்திரட்டிகள் ஊடாகப் பரப்புகிறோம். அவ்வகையில் இயங்கி வந்த பல வலைத்திரட்டிகள் இன்று செயலிழந்து விட்டன. ஆயினும், ஊற்று - வலைத்திரட்டி உங்கள் வலைப்பதிவுகளைத் தானியங்கி முறையில் சுடச் சுடத் திரட்டி வழங்கியது. ஊற்று முயன்று வெளிப்படுத்திய திரட்டியில் சில குறைகளும் இருக்கத்தான் செய்தது. அதனைச் சுட்டிக் காட்டிய நட்புகளுக்கு எமது நன்றி.

ஊற்று - வலைத்திரட்டியின் முதற் பதிப்பில் சிறு மாற்றம் (அழகுபடுத்தி) செய்து கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் இரண்டாம் பதிப்பில் வெளியீட்டு விரிப்பில் மாற்றம் செய்து பார்வைக்கு இலகுபடுத்திக் கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் மூன்றாம் பதிப்புப் பல வசதிகள் கொண்ட சிறப்பு வலைத்திரட்டியாக வெளிவர இருக்கிறது. அதுவும் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைச் சுடச் சுடத் திரட்டி வழங்கும் என்பதனைத் தெரிவிக்கின்றோம்.

இனிய எங்கள் வலையுறவுகளே!
எமது முயற்சிகள் வெற்றியடைய உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். மேற்படி எமது வலைத்திரட்டி முயற்சிகளை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து, அவர்களையும் எமது வலைத்திரட்டியில் இணையச் செய்யுங்கள். எமது வலைத்திரட்டியில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, எமது வலைத்திரட்டியின் அடுத்த பதிப்பினைச் சிறந்த தளமாக வெளியிட உதவுங்கள்.

இவ்வண்ணம்

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

ஞாயிறு, 5 ஜூன், 2016

சித்திரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டியின் வெற்றியாளர்கள்.-2016

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சித்திரை மகளே வாராய் என்ற தலைப்பில் 100 க்கு மேற்பட்ட கவிஞர்கள் போட்டியில் பங்கு பற்றினார்கள்  ஒவ்வொரு கவிஞர்களும் படைத்த கவிதைகள் மிக அருமையாக உள்ளது இருந்தாலும் வெற்றியாளர்கள் தேவை அல்லவா அதில் இருந்து தரமான கவிதைகள் வடிகட்டப்பட்டது அந்த வெற்றியாளர்கள் விபரம் வருமாறு.

பல சிரமங்களுக்கு மத்தியில் நடுவராக இருந்து தமது கடமையை சிறப்பாக செய்து முடித்த நடுவர்களுக்கு எனது நன்றிகள் பல.

திரு.கவிஞர் ரமணி ஐயா
திரு. நா.பச்சைப்பாலன்ஐயா.
திரு.திண்டுக்கல் தனபாலன்
திரு .கா. யாழ்பாவாணன்

ஆகியோருக்கும் ஊற்று செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊற்று அமைப்பாளர் என்ற அடிப்படையில் எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.

வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் முகவரியை அனுப்புமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன் பரிசுப்பொருட்கள் தபாலில் வந்து சேரும்.

ootru2@gmail.comஇந்த மின்னஞ்சலுக்கு தங்களின்முகவரியை அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன்

1ம் இடம் பெற்ற கவிதை.
சித்திரை மகளே, வாராய்!-1
1
சித்திரை மகளே, வாராய்! சீர்பல கொணர்ந்து சேர்ப்பாய்!
இத்தரை செழிக்கச் செய்வாய்! ஏழைகள் இடர்து டைப்பாய்!
நித்திரை விலக்கி வைப்பாய்! நீடிய பெருமை சேர்ப்பாய்!
முத்திரை பதித்துச் செல்வாய்! முன்னிலும் புதிதாய் வந்தே!
2
கார்முகில் மழையு குக்கக், காடெலாம் பசுமை பூண,
நீர்வளம் பெருகி ஓட, நீணிலம் விளைச்சல் கூட,
சீர்பட விலங்கி னங்கள் சிறக்க, வளமை சேர்க்க,
பார்வளம் பெருகப், பஞ்சம் பட்டினி ஒழிக்க வாராய்!
3
சோலையில் மலர்கள் பூக்கச், சூழவண் டினங்கள் பாட,
காலையில் குயில்கள் கூவக், கண்கவர் மயில்கள் ஆட,
மாலையில் மணக்கும் தென்றல் மட்டிலாக் குளுமை சேர்க்க,
ஓலையில் கிளிகள் ஊஞ்சல் உந்திட வருக, பாவாய்!
4
நாட்டினில் அமைதி காக்க, நல்லறம் தழைத்து நிற்க,
கூட்டமாய் இணைந்து மக்கள் கூடியே இனிது வாழ,
வாட்டிடும் வறுமை நீங்க, வாய்த்திடும் தொழில்கள் ஓங்க,
பூட்டிய விலங்கொ டிக்கப் பூவையே, மகிழ்ந்து வாராய்!
5
மக்களின் நலத்தை நாடும் மாநில அரசு வேண்டும்!
தக்கவர் அமைச்ச ராகித் தாழ்நிலை தவிர்க்க வேண்டும்!
திக்கெலாம் புகழ நீதி செய்திட நடுவர் வேண்டும்!
சிக்கலாய்ப் பெருகும் ஊழல் தீய்த்திட வருக, பாபாய்!


2ம் இடம் பெற்ற கவிதை


சித்திரை மகளே வாராய்!

சித்திரை மகளே வா வா! - உன்னை சிறம் தாழ்ந்து
கரம் பணிந்து வணங்குகின்றோம் வா வா!

கோடி பலன்கள் கொட்டித்தரும்
குணங்கள் பல கொண்ட ஆன்மீக 
மகளே (மாதமே) வா வா!

சொக்கநாதர் திருக்கல்யாணத்தையும்
சித்திரை மாத பௌணமியையும் கொண்ட
தமிழரின் முத்திரை மாத மகளே வா! வா!

அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையும்
தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயிலின்
திருவிழாவையும் - மேலும் பல்வேறு
திருதளங்களில் ஆராதனைளையும் அர்ச்சனைகளையு
தன்னகத்தே கொண்ட சித்திரை பாவையே வா! வா!

ஊர்கூடி தேர் இழுத்தது போல
உலகம் கூடி போற்றும் திருநாட்களை - உன்
அகத்தே உள்ளடக்கிக்கொண்டிருக்கும்
உன்னத கலைமகளே வா! வா!

பாவ புண்ணியத்தின்  கணக்கெழுதும்
சித்திர புத்திரனும்
தசரத சக்கரவர்த்தியின் தவபுதல்வன்
ராமபிரானும்
மதத்தில் புரட்சி செய்த மகான்
ஸ்ரீ ராமனுஜனும்
மகத்தான போதனைகளை உலகிற்கு வழங்கிய
மகவீராரும்
அவதரித்த சித்திரை மகளே வா! வா

இச்சித்திரை பிறக்கும் திருவழா
இத்திரையோர்களுக்கு பெருவிழா!
கைகூப்பி உனை வணங்குகின்றோம் வா! வா

3ம்இடம் பெற்ற கவிதை
சித்திரை மகளே வாராயா’3

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

பங்குனித் திங்கள் ஓடி மறைந்திட
பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட
தங்கத் தமிழ்மொழி ஓங்கி வளர்ந்திட
பாங்குடன் பண்பிணை போற்றி மகிழ்ந்திட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

பசியும் பஞ்சமும் இல்லாதொழிந்திட
பகைவர் யாவரும் அன்புறவாடிட
பாசமும் நேசமும் அவனியில் நிலைத்திட
பொய்யும் புரட்டும் நமை விட்டோடிட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

மாவிலைத் தோரணம் வாசலில் அசைந்திட
மாக்கோலம் அழகுடன் கண்களை கவர்ந்திட
மங்கள இன்னிசை எங்கும் முழங்கிட
மகிழ்வுடன் துன்முகி ஆண்டு பிறந்திட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

-நன்றி-
-அன்புடன்-
-ஊற்று அமைப்பாளர்-
கவிஞர்.த.ரூபன்-


வியாழன், 2 ஜூன், 2016

ஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு

வலை உறவுகளே! இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கும் எமது புதிய பணியை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினோம். அந்நிகழ்வின் சிறு தொகுப்பைத் தங்களுடன் பகிருகின்றோம். இந்நிகழ்விற்கு அறிஞர்கள் இப்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒத்துழைப்புத் தந்தார்கள். இவ்வாறு உலகெங்கும் மேற்கொள்ள அறிஞர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தனர். இவ்வொளியொலி (வீடியோ) நிகழ்வைப் பார்த்த பின் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.


அறிஞர்களின் ஒத்துழைப்போடு இவ்வாறான கருத்தரங்குகளை உலகெங்கும் தொடர, உங்கள் மதியுரைகளையும் வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம்.