திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்.

வணக்கம்
உறவுகளே.
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்றஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் 60 க்கு மேற்பட்ட கவிஞர்கள் பங்கு பற்றியுள்ளார்கள் ஒவ்வொரு கவிஞர்களும் மிக அருமையாக தங்களின் கவித்துவத்தை படைத்துள்ளார்கள்அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நடுவர்கள் தெரிவு செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தும்திறமையான நடுவர்கள் மிகத் திறமையாக வெற்றியாளர்களை தெரிவு செய்தார்கள்.

அந்த வெற்றியாளர்கள். விபரம் பின்வமாறு.



நடுவராக கடமையாற்றியவர்கள்

கவிஞர்.ரமணி ஐயா-(இந்தியா)
வலைச்சித்தர்.திண்டுகல் .தனபாலன்(இந்தியா)
அறிஞர்.யாழ்பாவானன் (இலங்கை)

மூவருக்கும் ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர் என்ற வகையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வெற்றி பெற்ற 1ம் இடம்.2ம் இடம்.3ம் .இடம் கவிதைகள் வருமாறு.

1ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.

மடியவில்லை   மனிதநேயம் ;   மண்ணிற்   குள்ளே
            மறைந்திருக்கும்    விதைநீரால்   முளைத்தல்   போன்று
அடித்தபெரு    மழையினாலே    மதங்கள்   சாதி
            அழிந்துநெஞ்சில்    துளிர்ந்ததுவே   அன்பு   நேயம் !
வடிந்திடாமல்    மழைநீர்தாம்   வீதி   சுற்றி
            வழியமைத்து   வீட்டிற்குள்    புகுந்த   போல
இடியோடு    வந்தமழை    அக்கம்   பக்கம்
            இருப்போரை    இணைத்ததுவே    இரக்கம்   ஊட்டி !

பாய்ந்துவந்து   ஏரிநீர்தாம்    சூழ்ந்து   போது
            படகுகளில்   சுற்றிசுற்றி   உதவி   காத்தார்
தீய்த்தபசி    வயிற்றோடு    மாடி   மீது
            தீவாகத்    தவித்தோர்க்கும்    உணவு  ஈந்தார் !

நாட்டுமக்கள்   உள்ளத்துள்   கருணை   ஊறி
            நாற்புறமும்    குவிந்தனவே   பொருள்கள்   வந்து
கேட்குமுன்பே    பணம்உடை   போர்வை   சேர்த்துக்
            கேட்டுகேட்டு    அளித்தார்கள்   பாதித்   தோர்க்கே !

ஏழைபணக்   காரனென்னும்    பேத   மின்றி
ஏந்தியகை    யிலன்பாலே    நிறைத்தார்   நன்று
வாழையடி   வாழையாக   இருந்த   பண்பு
            வாரிவந்த    மழையாலே    தழைத்த   தின்று !

-ஆக்கம்-பாவலர்.கருமலைத்தமிழாழன்-

2ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.


அற்றார் அழிபசி தீர்க்க
அய்யன் திருவள்ளுவர்
ஓடி வந்தார் !

அட்சயப் பாத்திரமேந்திய
மணிமேகலா தெய்வங்கள்
மனித உருவெடுத்து
மாநகர வெள்ளத்தின்
துயர் துடைத்தனர் !

பாலென அழுவோர்க்கு
பால் தருவோம் பசுங்
கூழென வருவோர்க்கு
சோறிடுவோமென்று
கண்ணதாசர்கள்
கடைவிரித்தனர் !

தனி மனிதனுக்கு
உணவில்லையோ என்று
பாரதிகள்
உணவு சமைத்து
ஓடி வந்தனர் !

தமிழ்நாடே
தலைநகர் நோக்கி
விரைந்தது !

விண்ணிலிருந்து
உணவு மழை
வீடு தேடிப்
பொழிந்தது !

மண்ணில் வந்து
தரை தட்டிய கப்பல்
மாநகரின்
பசி தீர்த்தது !

வெள்ளம் வடியுமுன்னே
மக்களின் வேதனை வடிய
உள்ளங்கள் கோடி
துடித்தன !

மனிதாபிமானம் வென்றதை
மனிதம் பூத்ததை
தமிழ் நிலம்
தரணிக்கு உணர்த்தியது !
 -ஆக்கம்-திரு. வேல் முருகன்-
3ம் இடம் வெற்றி பெற்ற கவிதை.

அடைமழையா? கடல்நடுவே தவித்தோம்வாழ்வே, 
அழிந்ததுவோ நீளுமதோ யாரே கண்டார்?
கடையெதுவோகலமதுவோஎல்லாம் நீரே!
கால்தழுவி பாலென்றால் பன்னூ  றென்றார்!



முகமதியர் கடையதனில் கடுகும் தீண்டா :
முக்காடு இட்டகுல இனமே வேண்டா :
பகைமையினை கெடுமதிகள் கக்கும் போழ்தில்
பண்போடு பிரசவித்தார் : பிணஞ்சு  மந்தார்!



கழுத்தளவு தண்ணீரில் உண(ர்)வை தந்தார் :
கண்ணீரில் நனைக்கின்றோம் உந்தன் தாளை!
எழுத்தளவு ஏடளவு எதுவும் போறா!
எம்முயிரை காத்தவரை மனதிற் கொள்ளின்!


ஏசுவல்லா ஈசனவன் எதிரில் கண்டோம்!
எம்மெதிரே தம்முயிரை தூசாய் கொண்டோர்!
தூசுவல்லோ பிறன்பொருளில் தம்பேர் காண்போர்
துயரற்று  வாழுகிறார் இவரைக்  கொண்டே! 

-ஆக்கம்-ப.தமிழ்வாணன்-

வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசு பொருட்கள் தபால் வழி மிக விரைவில் வந்தடையும் என்பதை மிக்க மகிழ்வாக அறியத்தருகிறோம்

சித்திரை வருடப்பிறப்புக்கான போட்டி மிக விரைவில் அறிவிக்கப்படும்......


-நன்றி-
-அன்புடன்-
-ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற அமைப்பாளர்
கவிஞர்.த.ரூபன்-



வியாழன், 21 ஜனவரி, 2016

2016 தைப்பொங்கல் போட்டி முடிவு நாள் நெருங்கிடுச்சு!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டதே! 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்று அறிவித்திருந்தோம். வலை உறவுகளே! 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் இப்போட்டிக்கு தாங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா? இன்னுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முயலவில்லையா? 48 மணி நேரம் போதும் தானே, முயன்று பாருங்கள்.

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் கண்ணுற்ற நாம், அதனைக் கருத்திற்கொண்டே கீழ்வரும் போட்டித் தலைப்பைத் தந்திருந்தோம்.

போட்டித் தலைப்பு: "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்"
போட்டி விரிப்பு : http://ootru1.blogspot.com/2015/12/2016.html


தலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே! அப்படியாயின், இப்போட்டியில் கலந்து கொள்ள 48 மணி நேரம் போதாதா? போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றோம்; இதுவரை போட்டியில் பங்கெடுக்காதவர்களை போட்டியில் பங்கெடுக்குமாறு அழைக்கின்றோம்.

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா? அப்படி ஒருபோதும் இருக்காதே!

கருங்கல்லைத் துளைத்தேனும் அதற்கப்பால்
என்ன, எப்படி என்றவாறு
புனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்
பாவலர்/கவிஞர் என்பவரின் உள்ளத்தில்
இயல்பாகத் தோன்றும் என்றால்
நம்மால் முடியாதென இருக்கலாமோ?
கண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே
கண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே
உண்மையில் பாப்புனைய விரும்பும்
உம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே!
உலகெங்கும் உடனுக்குடன் உறுமிய
ஊடகங்களின் தகவலை வைத்தே
ஒரு முறை உண்மை நிகழ்வை
உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே
உங்களைப் பாதிப்புக்கு உள்ளானவராக
எண்ணிக் கொண்டே - எதிரே
உதவிக்கு வந்த உண்மைக் கைகளை
அவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)
பாவாக/ கவிதையாக புனைய இயலுமே!

நீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள்! கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.

<a href="http://ootru1.blogspot.com/2015/12/2016.html" target="_blank"> <img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo1RetMC7LDwwsUGLftDQBbrU3IRcwYlS__NkorcRDSk2MqPfPUjmyIkza9d4xReBGNVYe_mqocmVNmHnxpH2eU91dE0Jy3OtaNhk3Xxu-1wSoQ5F4CcG_mHgYFcU6wPNW1_9MPmxeSTk/s640/Untitled-1+copy.jpg" width="200" /> </a>
உங்கள் தேவைக்கு ஏற்ப width="200" height="240" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.



உறவுகளே! உங்கள் வலைப்பூக்களை
'ஊற்று' திரட்டியில் இணைத்து - உங்கள்
பதிவுகளைப் பரப்பலாம் வாருங்கள்!

செவ்வாய், 5 ஜனவரி, 2016

'ஊற்று' வலைப்பூப் பதிவுகளின் திரட்டியில் இணையுங்கள்!

பல வலைத் திரட்டிகள் செயலிழந்து வருகின்றன. சில வலைத் திரட்டிகள் ஏனோ தானோ எனச் செயற்படுகின்றன. சில வலைத் திரட்டிகள் தானியங்கிச் செயற்பாடின்றி, பதிவர்கள் புதிய பதிவுகளை இணைத்தால் இணைக்கின்றன. இவற்றிலிருந்து ஊற்று வலைப்பூப் பதிவுகளின் திரட்டி முற்றிலும் தானியங்கிச் செயலாகப் புதிய பதிவுகளை இணைத்து வேறுபடுகின்றது.

கூகிளின் Dynamic Feed Control Wizard ஐப் பயன்படுத்தி இத்தானியங்கித் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வலைப்பூவை ஒரு தடவை இணைத்துவிட்டால் போதும். நீங்கள் உங்கள் வலைப்பூவில் புதிய பதிவை பதிந்த பின்னர்; 'ஊற்று' திரட்டியைத் திறந்து பார்த்தால், உங்கள் புதிய பதிவு இணைக்கப்பட்டிருக்குமே!

'ஊற்று' திரட்டியில் நடுப் பகுதியின் மேல் பகுதியில் மாறும் திரையில் இணைக்கப்பட்ட பதிவுகளின் சுருக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த மாறும் திரையிற்குக் கீழே உங்கள் வலைப்பூவின் பெயரும் இணைக்கப்பட்ட புதிய பதிவின் தலைப்பும் காணப்படும். எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomize) பார்வையிட முடியும். அதாவது இணைக்கப்பட்ட ஒழுங்கின்றி எவரது பதிவும் நடுப் பகுதியின் மேல் பகுதியில் தோன்றும்.

அப்படியாயின், இவை உண்மையா பொய்யா என்றறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி 'ஊற்று' திரட்டியைத் திறந்து பாருங்கள். மாற்றங்களை இனம் காண மீள மீளத் திறந்து பாருங்கள்.
இதோ 'ஊற்று' திரட்டிக்கான இணைப்பு http://ootru.yarlsoft.com/

நீங்கள் 'ஊற்று' திரட்டியைப் பார்வையிட்டதும் எப்படி இணையலாம் என எண்ணியிருப்பீர்கள். அதற்கு வலைப்பூவின் பெயர், வலைப்பூவின் RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு, ஆகியவற்றை ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். நாம் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைத் திரட்டி வெளியிடுவோம்.

உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடிப்பது எப்படி?
கூகிள் பிளொக்கர் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /feeds/posts/default என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
http://www.ypvnpubs.com/feeds/posts/default
வேர்ட்பிரஸ் ஆயின்
உங்கள் வலைப்பூ முகவரியுடன் பின்னொட்டாக /?feed=rss என்பதைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டாக
https://mhcd7.wordpress.com/?feed=rss
மேற்படி உங்கள் வலைப்பூவிற்கான RSS Feed Url ஐக் கண்டுபிடித்தால்; கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிச் சரிபார்க்கலாம்.

தற்போது ஒரு பதிவர் ஒரு வலைப்பூவை மட்டும் இணைக்க வாய்ப்பு உண்டு. பின்னர் மற்றையதை இணைக்க வாய்ப்புத் தரப்படும். ஆயினும், மூன்று மாதங்களுக்கு மேல் பதிவுகள் இடப்படாத வலைப்பூக்களை அல்லது தமிழர் பண்பாட்டை மீறும் பதிவுகளை இடும் வலைப்பூக்களை இத்திரட்டியில் இருந்து நீக்கிவிட எமக்கு உரிமை உண்டு. இதனைத் தாங்களும் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களையும் பயன்படுத்த அழையுங்கள்.


புதன், 23 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016




ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்





கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-24-12-2015 தொடங்கி 24-01-2016 வரையான காலம் இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய தலைப்பு -
பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் 
24-01-2016 ,இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-